தரம்சாலா: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இப்போட்டியில் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். 314வது இந்திய வீரராக தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். ரஜத் படிதாருக்கு காயம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் இணைந்துள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பும்ரா இணைந்துள்ளார்.
படிக்கல் அறிமுகத்துடன் சேர்த்து வரலாற்றில் முதல்முறையாக ஒரே தொடரில் அதிக அறிமுக வீரர்களை களமிறக்கியுள்ளது இந்தியா. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடர் மூலமாக டெஸ்ட் அரங்கில் ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமான வீரர்களாக களமிறங்கிய நிலையில் ஐந்தாவது வீரராக தேவ்தத் படிக்கல் அறிமுகமானார்.
முன்னதாக, இந்த போட்டி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
இதையடுத்து, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பி வழங்கப்பட்டது. அஸ்வினின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். குடும்பத்தினர் முன்னிலையில் அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பயிற்சியாளர் ராகுல் திராவிட் வழங்கினார்.
இதற்கிடையே, இங்கிலாந்து அணி தரப்பில் ராபின்சன் நீக்கப்பட்டு மார்க் வுட் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
தற்போதைய நிலையில் முதல் சீசனில் 7 ஓவர்கள் முடிவில் 20 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி.