இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக கடற்றொழில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் இக்கோரிக்கையை முன்வைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்துக்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வரமாட்டார்கள் என தமிழக அரசு உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.