பாகிஸ்தானும் சீனாவும் நட்பு நாடுகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு சீனா அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்து இருக்கிறது. அதோடு பாகிஸ்தானில் சாலை மற்றும் மேம்பால கட்டமைப்பு பணிகளையும் சீனாவே மேற்கொண்டு வருகிறது. இதனால் அடிக்கடி சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல்கள் சென்ற வண்ணம் இருக்கிறது. இக்கப்பல்கள் மும்பை வழியாகத்தான் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். அக்கப்பல்களை இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அது போன்ற ஒரு கப்பலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் எடுத்துச்செல்லப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உளவுத்துறை உடனே இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அக்கப்பலை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிக்க ஆரம்பித்தனர். மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சி.ஜி.எம்.அட்டிலா என்ற சரக்கு கப்பல் பாகிஸ்தானை நோக்கி சென்றது. அந்த கப்பலை மும்பை அருகில் உள்ள நவசேவா துறைமுகத்தில் வழிமறித்த கடலோர பாதுகாப்பு, சுங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் கம்ப்யூட்டர் நியுமெரிக்கல் கன்ட்ரோல் மெஷின் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த மெஷின் இத்தாலியில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த மெஷினை கம்ப்யூட்டர் கொண்டு மட்டுமே இயக்க முடியும். வட கொரியா இதனை ஏவுகணைகள் தயாரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்த மெஷின் அணு ஆயுத தடுப்பின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது . இதையடுத்து உலகில் 42 நாடுகள் இது போன்ற பொருட்களின் பரிமாற்றம் குறித்த தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. அதிகாரிகள் கப்பலில் முழுமையாக சோதனை செய்த போது அதில் அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான 22180 கிலோ பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற கப்பலில் இது போன்று பறிமுதல் செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகள் இப்பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால் பாகிஸ்தான் சீனாவில் இருந்து இதனை வாங்க முயன்றதாக தெரிகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இதே போன்று நவசேவா துறைமுகத்தில் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படக்கூடிய தெர்மோ எலக்ட்ரிக் உபகரணங்கள் சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏவுகணைகள் தயாரிக்க தேவையான பொருட்களை கப்பலில் எடுத்துச்சென்ற போது இந்திய எல்லையில் பிடிபட்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்க தேவையான பொருட்களை சப்ளை செய்த சீனாவின் 3 நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY