கைதாகியுள்ள முன்னாள் பேராயர் ஜோசஃப் வெஸெலொவ்ஸ்கி
சில காலம் முன்புவரை டொமினிக்கன் குடியரசில் வத்திக்கானத்தின் பிரதிநிதியாக இருந்துவந்த உயர் அந்தஸ்து கொண்ட போலந்துப் பேராயர் ஜோசஃப் வெஸெலொவ்ஸ்கியை சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்ய போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
சிறுபிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டினை கர்ரீபியன் தீவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் 66 வயது பேராயர் மீது முன்மைக்க திருச்சபை அங்கியை அவர் ஏற்கனவே கழற்ற வேண்டியதாயிற்று.
குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து வத்திகானத்தின் மூத்தப் பிரதிநிதியாக இருந்த ஜோசஃப் வெஸெலொவ்ஸ்க்கி சென்ற ஆண்டு ரோமுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார்.
2008 முதல் 2013 வரையான காலகட்டத்தில் டொமினிக்கன் குடியரசில் சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக வத்திகானத்தின் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரியால் அவர் மீது முறையான குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டன.
டொமினிக்கன் குடியரசில் வெஸொலொவ்ஸ்கி கீழே வேலைபார்த்திருந்த ஊழியர் ஒருவர் உள்ளூர் பொலிசாருக்கு துப்பு கொடுக்க அவர் மீதான குற்றச்சாட்டு வெளியில் வந்தது.
ஆனால் ராஜீய அதிகாரிகளுக்குரிய அந்தஸ்து பேராயருக்கு இருந்ததால், டொமினிக்கன் குடியரசினாலும், அல்லது அவரது சொந்த நாடாகிய போலந்தினாலும் வெஸொலொஸ்கி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது.
இந்நிலையில், ரோமிலுள்ள கிறிஸ்தவ மடம் ஒன்றில் இவர் வாழ்ந்துவந்த இவரைக் கைதுசெய்யச் சொல்லி போப்பாண்டவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அளவுக்கு உயர் பதவி கொண்ட ஒரு கத்தோலிக்கப் பிரதிநிதி வத்திகானத்தில் கைதுசெய்யப்படுவதென்பது இதுவே முதல் முறை.
உடல்நலப் பாதிப்புகள் இருப்பதால் கைதுக்குப் பின்னர் வெஸெலொவ்ஸ்கியை சிறையில் அடைக்காமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக வத்திகானம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
இந்த வருடத்தின் பிற்பகுதியில் வத்திகான நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு நடக்கும் எனத் தெரிகிறது.