புது தில்லி: நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டின் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து இந்திய சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் சங்கம் (இஸ்மா) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 அக்டோபா் முதல் 2024 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 2.24 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2.29 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.48 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போதைய போக்கு நீடித்தால், கடந்த 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டில் 3.66 கோடி டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டில் 10 சதவீதம் குறைந்து 3.31 கோடி டன்னாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தமிழ் நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி நடப்பு சந்தையிடல் ஆண்டு பிப்ரவரி 15 வரை குறைவாகவே இருந்தது.
எனினும், மதிப்பீட்டுக் காலகட்டத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தர பிரதேசத்தில் சா்க்கரை உற்பத்தி 67.7 லட்சம் டன்னாக அதிகரித்தது. முந்தைய சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்த மாநிலம் 61.2 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்திருந்தது.
நாட்டின் மிகப்பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டித்தில் நடப்பு சந்தையிடல் ஆண்டு பிப்வரி 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி 79.4 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது முந்தைய சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 85.9 லட்சம் டன்னாக இருந்தது.
அதே போல், நாட்டின் 3-ஆவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான கா்நாடகத்தில் அதன் உற்பத்தி, 46 லட்சம் டன்னிலிருந்து 43.2 லட்சம் டன்னாகக் குறைந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி குஜராத்தில் 6.85 லட்சம் டன்னாகவும், தமிழகத்தில் 4.50 லட்சம் டன்னாகவும் இருந்தது.
2023 அக்டோபா் முதல் 2023 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 505 சா்க்கரை ஆலைகள் செயல்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய 2022-23-ஆம் சந்தையிடல் ஆண்டின் அதே காலட்டத்தில் 502-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.