ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் தீபிகா – பிரவீன் இணை சீன- தைபே இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நேற்று (ஜுலை.23) கோலாகலமாக தொடங்கியது. இதில், இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.
ஆனால், சோகம் தரும் செய்தியாக முதன் முதலாக நடந்த பதக்க போட்டியான, துப்பாக்கி சுடுதல் பிரிவில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு ஆறுதல் தரும் செய்தி கிடைத்துள்ளது. ஆம்! வில்வித்தை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் – தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று காலை நடைபெற்ற இப்போட்டியில் சீன தைபே அணியை – இந்திய அணி எதிர்கொண்டது. இதில், முதல் இரண்டு சுற்றில் இந்தியா 2 – 0 என்று பின்தங்கியிருந்தது.
இந்தியாவின் கதை அவ்வளவு தான் என்று பார்வையாளர்கள் நினைத்திருக்க, பிரவீன் எய்திய அம்புகள் ஒவ்வொன்றும் புள்ளிகளை குவித்தன. தீபிகாவும் பக்கபலமாக கைக்கொடுக்க, இந்திய அணி திமிறி எழுந்தது. முடிவில், 5 – 3 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம், காலிறுதிப் போட்டிக்கு இந்த இணை முன்னேறியது.
ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெரும் ஏமாற்றம் சந்தித்திருந்த இந்திய அணிக்கு, வில்வித்தை வெற்றி சற்று ஆறுதல் அளித்துள்ளது. இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. சற்று சுதாரித்து ஆடினால் போதும், நிச்சயம் ஏதாவது ஒரு மெடலை தீபிகா – பிரவீன் ஜோடி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டைகளை இன்று முதல் நாம் காண முடியும். இன்னும் சிறிது நேரத்தில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கம் வெல்லப் போவது யார் என்று தெரிந்துவிடும். இந்தியாவும் இன்றே பல போட்டிகளில் களம் காண்கிறது. ஹாக்கி, பளுதூக்குதல், ஜுடோ, டேபிள் டென்னிஸ், துடுப்பு படகு என்று பல விளையாட்டுப் போட்டிகளில் இன்று களம் காண்கிறது.