எப்.எல். உரிமம் 4 இன் கீழ் 200 மதுபான அனுமதிப் பத்திரங்கள் அரசாங்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 பேருக்கு ஏற்கனவே இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதற்காக 2 கோடி ரூபா கப்பமாக அறவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் (19) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.
மேலும், தற்போது 6 மதுபான உற்பத்திசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டே மது வரி ஆணையாளராக குணசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை இலக்காக கொண்டு பணம் சேகரிப்பதான செயற்பாடா இது என்ற சந்தேகம் எழுவதால் இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் நலனை கருதியே இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறேன். வரப்பிரசாதங்களுக்குட்பட்டு தான் பொய்யான விடயங்களை முன்வைக்கவில்லை. சொல்வதை பொறுப்புடன் சொல்கிறேன். இந்த சட்டவிரோத உரிமப் பத்திரங்கள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திரும்பப் பெறப்படும். இது தொடர்பான விரிவான விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எனவே இதுதொடர்பில் மதுவரித் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதில்,
சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை குறைக்கவும் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, உரிய சட்டக் கட்டணங்களை மட்டுமே வசூலித்து புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், மதுவரித் திணைக்களம் வேறு எந்தவிதமான சட்டவிரோதக் கட்டணமோ, கப்பம் வாங்கவோ, சட்டவிரோதமான தொகையோ வசூலிக்காது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பொய்யான அநீதியான அறிக்கையை மதுவரித் திணைக்களம் வன்மையாக நிராகரிப்பதாகவும், அவ்வாறான அறிக்கைகளினால் மதுவரித் திணைக்களம் அவதூறு மற்றும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உரிமம் வழங்குவது தொடர்பிலும், அதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பிலும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்திற்கு ரூ. 1 – 1.5 கோடி வரையிலும் வசூலிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
The post சஜித்தின் குற்றச்சாட்டிற்கு மதுவரித் திணைக்களம் கண்டனம் appeared first on Thinakaran.