சென்னை: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11-வது வீரராக களம் கண்டு சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார் மும்பை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே. இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் 11-வது வீரராக பேட் செய்து சதம் விளாசி இருந்தார் தமிழகத்தை சேர்ந்த வித்யுத் சிவராமகிருஷ்ணன். அது குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்து உள்ளார்.
கடந்த 2001 சீசனில் சதம் பதிவு செய்திருந்தார் வித்யுத். தமிழ்நாடு அணிக்காக விளையாடிய அவர், டெல்லி அணிக்கு எதிராக 122 பந்துகளை எதிர்கொண்டு 115 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ரஞ்சி கோப்பையில் 11-வது வீரராக களம் கண்டு சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
“அந்தப் போட்டி நடைபெற்ற போது ஆடும் லெவனில் நான் இல்லை என்றுதான் நினைத்தேன். கேப்டன் ராபின் சிங், திடீரென வந்து 10 மற்றும் 11-வது இடத்தில் விளையாடப்போவது யார் என என்னையும், எம்.ஆர்.ஸ்ரீனிவாசையும் பார்த்து கேட்டார். சீனியர் வீரர்கள் ஸ்ரீனிவாசை பரிந்துரைத்தனர். நான் 11-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கினேன். சதம் விளாசினேன்.
அந்த இன்னிங்ஸ் முடிந்த பிறகுதான் நான் பயன்படுத்தியது சச்சினின் பேட் என அறிந்தேன். அந்த தகவலை சடகோபன் மகேஷ் என்னிடம் தெரிவித்தார். சச்சின், சடகோபன் ரமேஷுக்கு அந்த பேட்டை கொடுத்துள்ளார். அதனால் அது ரொம்பவே ஸ்பெஷல் என மகேஷ் சொன்னார்.
அந்த இன்னிங்ஸில் 25 முதல் 80 ரன்கள் வரை நான் அடித்த ஷாட் எனக்கு கனெக்ட் ஆனது. நான் 11-வது வீரர் என்பதால் விக்கெட்டை தவிர இழப்பதற்கு எதுவும் இல்லை என அறிந்து ஆடிய இன்னிங்ஸ் அது” என வித்யுத் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்த இன்னிங்ஸ் அவரை பேட்டிங் ஆல்ரவுண்டராக மாற்றியது. பேட்டிங் ஆர்டரில் பின்வரிசையில் ஆடி வந்த அவர் அதன் பிறகு டாப் ஆர்டரில் ஆடினார். தனக்கு பேட் செய்ய மிகவும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.