விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இல்லாமலேயே இந்தியா, இங்கிலாந்து அணியை திணறடித்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹேடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தை விடவும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
தற்போது 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 57.4 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் 218 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். அதிகபட்சமாக அந்த அணியின் ஸாக் க்ராவ்லே 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும் எடுத்தனர்.
தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், சர்ப்ராஸ் கான் 56 ரன்களும் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் 27 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 19 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விடவும் 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹேடின் கூறியதாவது- என்னிடம் கேட்டால் இங்கிலாந்து இந்தியாவின் பி அணியுடன்தான் விளையாடுகிறது என்று சொல்வேன். ஏனென்றால் இந்திய அணியில் கே.எல்.ராகுல், விராட் கோலி, ஷமி கிடையாது. ரிஷப் பந்த் விபத்தில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். கடந்த டெஸ்டில் பும்ரா விளையாடவில்லை.
இருப்பினும் இந்திய அணி இங்கிலாந்தை திணறடித்து வருகிறது. இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அற்புதமாக உள்ளது. கடந்த டெஸ்டில் துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி அனைத்து விதங்களிலும் இந்தியாவின் ஆதிக்க பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…