சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்கள் தொடங்கவுள்ளதை அடுத்து தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடிய மதிசா பதிரானாவுக்கு இடது தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் தீவிரமாக உள்ளதால் நடப்பு தொடரில் பதிரானா பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை அணி தரப்பில், “காயம் குணமடைய இரண்டு வாரங்கள் தேவை என்பதால், பதிரானா தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு பங்கேற்பதில் சந்தேகம்தான்” என்று தெரிவித்துள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதனிடையே, ஏற்கனவே காயத்தால் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே விலகிய நிலையில், பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் 12 ஆட்டங்களில் 19 விக்கெட்கள் வீழ்த்தி சென்னை அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் பதிரானா எனபது குறிப்பிடத்தக்கது.