காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைதான 30 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (01) அதிகாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பாலமுனை ஆரியம்பதி பகுதியில் தற்காலிகமாக கட்டப்பட்ட கொட்டகை போன்ற இடத்தில் 30 பேர் கூடியுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்திருந்தனர்.
பிணையில் வந்த ஸஹ்ரானின் உறவினர் 4 பேர் உட்பட 30 பேர் மீண்டும் கைது
அங்கு கூடியிருந்த குறித்த 30 பேரும், ஏதாவது குற்றச் செயலையோ அல்லது அரச விரோதச் செயலையோ செய்யும் நோக்கில் கூடியிருந்தனரா எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 30 பேரின் வாக்குமூலங்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டதுடன், மட்டக்களப்பு பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு, சந்தேகநபர்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரான் ஹாசிமின், சகோதரியின் கணவர் மற்றும் அவரது இரு மூத்த சகோதரர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், இந்தக் குழுவினர் எந்தவொரு குற்றச்செயலிலோ அல்லது அரச விரோதச் செயலிலோ ஈடுபடும் நோக்கில் ஒன்றுகூடியதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இளைஞர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட குறித்த நபர்கள் தங்களது விடுமுறை நாளான வெள்ளிகிழமைகளில் ஒன்று கூடி பொழுதை களிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மேற்படி சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை தலா ரூபா 100,000 ( ஒரு இலட்சம்) கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை, மார்ச் 06ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸாரும், பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.