2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 4 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியிருந்தது. ஆனால் கடைசி 3 சீசன்களிலும் அந்த அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. 2021, 2022-ம் ஆண்டு சீசனில் 8-வது இடத்தை பிடித்த ஹைதராபாத் அணி கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது.
இதனால் கேப்டனாக இருந்த எய்டன் மார்க்ரம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோன்று தலைமை பயிற்சியாளராக இருந்த பிரையன் லாரா வெளியேற்றப்பட்டு நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கேப்டனாக உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் கடும் போட்டிக்கு இடையே ரூ.20.50 கோடிக்கு வாங்கியிருந்தது. கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதனால் அவரது தலைமையில் புது எழுச்சி காணும் முனைப்பில் உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
டிராவிஸ் ஹெட்டுடன் ஹெய்ன்ரிச் கிளாசன், கிளென் பிலிப்ஸ், எய்டன் மார்க்ரம், மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ராகுல் திரிபாதி ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆல்ரவுண்டர்களாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா, தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சன், இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.
வேகப்பந்து வீச்சில் பாட் கம்மின்ஸுடன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார், பசல்ஹக் பரூக்கி, டி.நடராஜன், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் உள்ளனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோருடன் 3-வது வீரராக மயங்க் மார்க்கண்டே இடம் பெற்றுள்ளார். இவர்கள் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சீரான திறனை வெளிப்படுத்தியது இல்லை. இது பின்னடைவாக இருக்கக்கூடும்.