செலாயாங்:
தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்க, பெர்சாத்து கட்சி இன்று (மார்ச். 2) அவசரகாலப் பொதுக் கூட்டத்தை நடத்தியது.
இதற்கு அக்கட்சியின் தலைவரும் முன்னாள் மலேசியப் பிரதமருமான முகைதீன் யாசின் தலைமை தாங்கினார்.
மலேசியாவெங்கும் பெர்சாத்துவைப் பிரதிநிதிக்கும் ஏறத்தாழ 1,000 பேராளர்கள் இந்த அவசரகாலப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டிடத்தில் கட்சியின் விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கவும் அவற்றை நிறைவேற்றவும் கூட்டம் நடத்தப்பட்டது.
எதிர் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு பெர்சத்துவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் விதிமுறை மாற்றத்தின்படி அவர்களது கட்சி உறுப்பியம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி ஒதுக்கீடு, அரசாங்கத்தில் பதவி ஆகியவற்றுக்காக பெர்சத்துவைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமிற்குப் பகிரங்கமாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததை அடுத்து, கட்சித் தாவலுக்கு எதிராக பெர்சத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியுடன் இணைந்தால் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் அவர்களது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று பெர்சத்து கட்சியின் தலைவர்கள் கூறினர்.