சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.47,520-க்கு விற்பனையாகிறது. இதனால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. மறுநாள், 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஒரு பவுன் தங்கம் ரூ.42,700 முதல் ரூ.42,800 இடையில் விற்பனையாகி வந்தது.
பிறகு, பிப். 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம்தேதி ஆபரணத் தங்கத்தின் விலைபவுன் ரூ.45,520-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியது. தங்கம் விலை மீண்டும் படிப்படியாக ஏற தொடங்கியது. அதே ஆண்டு மே மாதம் 3-ம் தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.45,648-க்கும் விற்பனை ஆனது.
பின்னர், மீண்டும் தங்கம் விலை கடந்த ஆண்டு ஜுன் மாதம் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.46 ஆயிரம் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.47 ஆயிரமாக உயர்ந்துஎப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது.
இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.5,940-க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.47,520-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை மீண்டும் ஒருபவுன் ரூ.47 ஆயிரத்தை எட்டியுள்ளதைக் கண்டு, நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.51,280-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை: நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,000 ஆக இருந்தது.
இதுகுறித்து, நகை வியாபாரிகள் கூறும்போது, ‘சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும், இந்த விலை உயர்வு சில நாட்கள் வரை நீடிக்கும் என தெரிகிறது’’ என்றனர்.