இதுபோன்று கடைசி வரை நின்று தோனி மேட்சை முடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. நிச்சயம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு தூக்கமே வராது என்பது உறுதி.
ஐபிஎல் 2021 தொடரில், நடைபெற்ற Qualifier 1 ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை, கடைசி ஓவரில் எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தொடக்க வீரர் ஷிகர் தவான் 7 ரன்களில் ஹேசில்வுட் ஓவரில் அவுட்டானாலும், ப்ரித்வி பல நாட்களுக்கு பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்த ப்ரித்வி, ஜடேஜா ஓவரில் கேட்ச்சானார்.
எனினும், ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் டெல்லி அணி, 80 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் பிறகு, ரிஷப் பண்ட் – ஹெட்மயர் ஜோடி சரிந்த அணியை மீட்டெடுத்தது. எனினும், ஹெட்மயர், இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினார். பண்ட் – ஹெட்மயர் ஜோடி 17வது ஓவரில், 6வது விக்கெட்டுக்கு அரைசதம் விளாசியது.
இது ‘பிளே ஆஃப்’ என்ற பொறுப்பை உணர்ந்து இருவரும் மிக நேர்த்தியாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதிக் கட்டத்தில் ரிஷப் பண்ட் ஒற்றைக் கையில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார்.
சிறப்பாக ஆடிய ஹெட்மயர், 24 பந்துகளில் 37 ரன்கள் விளாசி பிராவோ ஓவரில் கேட்ச்சானார். கடைசி வரை களத்தில் இருந்த ரிஷப் பண்ட், 35 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க, டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில், முதல் ஓவரிலேயே டு பிளஸிஸை நோர்க்யா காலி செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில், மணிக்கு 147.5 கி.மீ வேகத்தில் வந்த லோ ஹைட் பந்தை, லெக் சைடில் தட்ட நினைத்த டு பிளசிஸ் உண்மையில் ஏமாந்து போனார்.
ஆம், மிடில் ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது நோர்க்யாவின் அந்த அதிவேக பந்து. பிறகு களமிறங்கிய உத்தப்பா உண்மையில் நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடந்த இரு போட்டிகளிலும் மிக மிக சுமாரான இன்னிங்ஸ் விளையாடிய உத்தப்பா, 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில், 2 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
அவரது மகன் நீல் நோலனுக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் பிறந்தநாளில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு வெற்றியை பரிசாக கொடுத்திருக்கிறார்.
ஆனால், இதன் பிறகு ஆட்டத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. மொயீன் அலி இறங்க வேண்டிய இடத்தில் ஷர்துல் தாகூரை களமிறக்கி சோதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். ஆனால், அவர் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சோதனை தோல்வியில் முடிய, அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். 18 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இரு ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது 19வது ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் 70 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். அவர் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார்.
பிறகு களமிறங்கிய தோனி, ஆவேஷ் கான் வீசிய 19வது ஓவரில், 5வது பந்தில் சிக்ஸ் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
பிறகு டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மொயீன் அலி 16 ரன்களில் அவுட்டானார். பிறகு, 2வது பந்து, 3வது பந்து, 4வது பந்து என தோனி ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாச, 19.4வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து சென்னை வென்றது.
கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகள் விளாசி 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து போட்டியை தித்திப்பாக முடித்துவைத்தார்.
இதுபோன்று கடைசி வரை நின்று தோனி மேட்சை முடித்து பல நாட்கள் ஆகிவிட்டது. நிச்சயம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு தூக்கமே வராது என்பது உறுதி. இதன் மூலம் தங்களது 9வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியுள்ளது.