லக்னோ: உத்தர பிரதேசத்தில் சார் ஆட்சியர் ஒருவர் முக்காடு போட்டுக்கொண்டு நோயாளி போல் சென்று சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் பிரோஸ்பூரில் கிரித்தி ராஜ் என்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி சார் ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டிடா மாய் என்ற இடத்தில் உள்ள அரசு சுகாதார மையத்தில் நாய்க்கடிக்கு ஊசி செலுத்த காலை 10 மணிக்கு பிறகும் மருத்துவர் வரவில்லை என கிரித்தி ராஜுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கிரித்தி ராஜ் ஒரு நோயாளி போல அந்த மருத்துவரிடம் பேசி அப்பாயின்மென்ட் பெற்றார். பிறகு அந்த சுகாதார மையத்துக்கு சென்ற கிரித்தி ராஜ், முக்காடு போட்டுக் கொண்டு, நோயாளியை போல அந்த மருத்துவரை சந்தித்தார். இதில் கிரித்தி ராஜிடம் அலட்சியமாக பேசிய மருத்துவர் பிறகு அவர் சார் ஆட்சியர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கிரித்தி ராஜ் கூறும்போது, “நான் முக்காடு போட்டுக்கொண்டு நோயாளி போல் மருத்துவரிடம் சென்றேன். ஆனால் நோயாளிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு அந்த மருத்துவர் நடந்துகொள்ளவில்லை.
வருகைப் பதிவேட்டை நான் சரிபார்த்தபோது ஊழியர்களில் சிலர் பணிக்கு வரவில்லை. பதிவேட்டில் கையொப்பம் இட்டவர்களில் சிலர் அங்கு இல்லை. மருந்துகளை பரிசோதித்தபோது பாதி மருந்துகள் காலாவதியாகி இருந்தன. நோயாளிகளுக்கு ஊசியும் முறையாக செலுத்தப்படவில்லை.இந்த சேவைக் குறைபாடு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
கிரித்தி ராஜ் மற்ற நோயாளிகளுடன் மருத்துவமனையில் காத்திருப்பது, மருந்தகத்தில் மருந்து ஸ்டாக்கை சரிபார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.