கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய நகரமான வில்டிஸில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வயதான பெண்மணியான எடி சிசரேலியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த முறை கடுமையான பனிப்பொழிவு காரணமாக மரங்கள் முறிந்து, நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடியிருந்த நிலையிலும் கூட அவரது 116-வது பிறந்தநாளை நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர்.
உள்ளூர் அரங்குகளில் அல்லது முதியோர் மையங்களில் வெகு விமரிசையாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவதில் பெயர் பெற்றவர் எடி. ஆனால் சமீப ஆண்டுகளாக அவரது பிறந்தநாளை நகர மக்கள் இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக்கியுள்ளனர். அவரது 116-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஊர்வலமும் நடைபெற்றது. கடும் பனிப்பொழிவிற்கு இடையிலும் இந்த வயதில் எடி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். இவருக்கு மரியாதை செய்யும் விதமாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கௌரவப் பரிசை வழங்கினர்.
எடியின் பிறந்தநாள் ஊர்வலம் உள்ளூர் நாய்கள் படைசூழ தொடங்கியது. அதற்குப் பின்னால் தீயணைப்பு வீரர்களும், பலூன்களும் விளக்குகளாலும் அலங்கரித்த கார்கள் வரிசையாக அணிவகுத்தன. பெரிய மீசையுடன் கூடிய உள்ளூர் இசை கலைஞர்கள் கிடார் வாசிக்க, அங்கு வசிக்கும் குழந்தைகள் கைகளில் பூக்களும் வண்ண அட்டைகளையும் ஏந்திக்கொண்டு நடந்து வந்தது விழாவிற்கு கூடுதல் அழகை சேர்த்தது.
உலகிலேயே இரண்டாவது வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள எடி, 1908-ம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி பிறந்தார். திருமணமாகி, குழந்தை பிறந்து, பேரக்குழந்தைகளும் பிறந்து இறந்த பிறகும் இன்று வரை சந்தோஷமாக உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒருபக்கம் டிமென்ஷியா பிரச்சனை, இன்னொரு பக்கம் தன்னுடைய உறவினர்கள் அனைவரும் இறந்து போன நிலையிலும் எடியின் மனது இன்றும் இளமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. 2012-ம் ஆண்டு தனக்கு 104 வயதாக இருக்கும் போது, தன்னோடு சேர்ந்து நடனமாட துணை ஒன்று வேண்டுமென உள்ளூர் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுக்குமளவிற்கு குறும்புத்தனமும் கொண்டவர். அந்த வயதிலும் நடனமாட வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிபடுத்தியதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தனது கணவர்களை இழந்த எடி தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
எடியின் பிறந்தநாள் விழாவை அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சந்தோஷமாக கொண்டாடி வரும் வேளையில், இத்தனை ஆண்டுகள் வாழ்வதற்கு ஏதாவது விசேஷ திறமை வேண்டுமா என எடியிடம் கேட்டால், அவருக்கே உரிய நகைச்சுவை பானியில், கொஞ்சம் சிவப்பு வைன் மற்றும் யாருடைய வம்புக்கும் போகாமல் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…