புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 29-ல் மத்திய அமைச்சரவை வழங்கிய நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் நேற்று மேலும் கூறியதாவது:
இந்திய செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் கீழ் 3 ஆலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. இது, தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்பை நோக்கி செல்வதற்கான உறுதியான பாதையை வகுக்கும். அத்துடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்க வகை செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
குஜராத்தில் தோலேரா, அசாமின் மோரிகான் மற்றும் குஜராத்தில் சனந்த் ஆகிய மூன்று இடங்களில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அடுத்த 100 நாட்களுக்குள் மூன்று அலகுகளுக்கான கட்டுமானப் பணி தொடங்கும்.
வடகிழக்கில் முதன் முறையாக செமிகண்டக்டர் ஆலை ரூ.27,000 கோடி முதலீட்டில் அசாமில் அமைக்கப்பட உள்ளது கவனிக்கத்தக்கது. இது, இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதுடன் இங்கு தயாரிக்கப்படும் சிப்கள் உலகம் முழுவதும் உள்ள பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும். வடகிழக்கில் தொழில்நுட்ப முதலீடு பற்றியகருத்து ஒரு போதும் விவாதிக்கப்பட்டதில்லை. பிரதமர் மோடி இந்த மரபை மாற்றிக்காட்டியுள்ளார் என்றார்.
செமிகண்டக்டர் ஆலையின் முக்கியத்துவம் குறித்து அமைச்சரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிப் வடிவமைப்பில் இந்தியா ஏற்கெனவே ஆழ்ந்த திறனை கொண்டுள்ளது. இந்த நிலையில் செமிகண்டக்டர் ஆலை அமைக்கப்படுவது இந்தியாவின் உற்பத்திதிறனை வெகுவாக அதிகரிக்கும். மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் சூழல் உருவாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.