லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடந்த 2022-ம் ஆண்டு சீசனில் அறிமுகமானது. முதல் சீசனிலும் அடுத்த சீசனிலும் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறி கவனம் ஈர்த்தது. தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியை எட்டி உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் அவர், லக்னோ அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பேட்ஸ்மேனாக மட்டுமே கே.எல்.ராகுல் களமிறங்கக்கூடும். இதனால் விக்கெட் கீப்பிங் பணியை குயிண்டன் டி காக் கவனிக்கக்கூடும்.
பேட்டிங் வரிசையை பொறுத்தவரையில் லக்னோ அணி அதீத பலத்துடன் காணப்படுகிறது. டாப் ஆர்டரில் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஆகியோரும் நடுவரிசையில் ஆயுஷ் பதோனி, கிருணல் பாண்டியா, மார்கஸ் ஸ்டாயினிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்களுடன் தற்போது இந்திய வீரர் தேவ்தத் படிக்கல், ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் டர்னரும் இணைந்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை நெருங்குவதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் மார்க் வுட் விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு வாங்கி உள்ளது லக்னோ அணி. வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரலாற்று வெற்றி பெற உதவியிருந்தார்.
மேலும் ரூ.6.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஷிவம் மாவி, ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மணிமாறன் சித்தார்த் ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர்களுடன் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியும் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.