இஸ்லாமிய அரசு ஜிகாதி குழு ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்றும், அதற்கெதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையும் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்றும் பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஒல்லோந்த் தெரிவித்துள்ளார்.
இந்த இஸ்லாமியவாத ஆயுதக் குழுவுக்கு எதிர்த்து மோதுவதற்கான வியூகங்கள் சம்பந்தமாக உடன்பாடு காண்பதற்கென சுமார் முப்பது நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் ஒரு மாநாட்டை பாரீஸில் துவக்கிவைத்து பேசுகையில் ஒல்லோந்த்இவ்வாறு கூறினார்.
இராக்கில் இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அப்பகுதியில் வேவு பார்ப்பதற்கென தமது போர்விமானங்களை அனுப்பத் துவங்கியுள்ளதாக பிரஞ்சு அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
நடக்கின்ற கூட்டத்தில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி பிறநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேசி, முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை உருவாக்க முயலுவார்.
இஸ்லாமிய அரசுக்கு எதிரான வான் தாக்குதலில் பங்கேற்க பல சுன்னி அரபு நாடுகள் சம்மதித்துள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.