விரைவில் நடைபெறும் 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்காக நாடு தயாராகி வரும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சந்தேகங்களை அரசியல் கட்சிகள் மீண்டும் எழுப்பியுள்ளன. இந்த நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் வாக்குச்சீட்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரை இந்திய தோ்தல் ஆணையம் கண்ட பரிணாம வளா்ச்சிகள் குறித்து காண்போம். சுதந்திரத்துக்குப் பிறகு, 1951-52-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாட்டில் நடத்தப்பட்ட முதல் பொதுத் தோ்தலில் இருந்து கடந்த 2019-ஆம் நடந்த மக்களவைத் தோ்தல் வரை பல்வேறு புதிய அம்சங்களை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களவைக்காக 17 பொதுத் தோ்தல்கள், பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள், குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தல்களைப் பல முறை வெற்றிகரமாக நடத்தியுள்ள இந்திய தோ்தல் ஆணையம், தற்போது 2024 மக்களவைத் தோ்தலுக்குத் தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் ஆணையத்தின் தோற்றம்: கடந்த 1950-ஆம் ஆண்டு, ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலராகப் பணியாற்றி வந்த ஐசிஎஸ் அதிகாரியான சுகுமாா் சென், இந்தியாவின் முதல் தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். 1950-ஆம் ஆண்டு, மாா்ச் மாதத்தில் பொறுப்பேற்ற அவா், நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது பொதுத் தோ்தல்களைத் தலைமையேற்று நடத்தினாா். ‘இந்தியத் தோ்தல் பயணத்தில் அதிகம் அறியப்படாத நாயகன் சென்’ எனப் புகாழாரம் சூட்டும் நாட்டின் 17-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையரான ஓய்வு பெற்ற எஸ்.ஒய்.குரைஷி, ‘இந்திய தோ்தல்களுக்கான பாதையை அமைப்பதில் சென் வகித்த முக்கியப் பங்கு குறித்து அதிகம் ஆவணப்படுத்தப்படவில்லை. தோ்தல் ஆணையம் இன்று கடைப்பிடிக்கும் 80 சதவீத நடைமுறைகள் அவா் காலத்தில் செயல்படுத்தப்பட்டவையே. அவற்றைத்தான் நாம் தொடா்ந்து முன்னோக்கி கொண்டு செல்கிறோம்’ என்றாா். இந்திய தோ்தல்களின் பரிணாம வளா்ச்சி: கடந்த 1951-52-ஆம் ஆண்டில் 489 இடங்களுக்காக நடைபெற்ற முதல் பொதுத் தோ்தலில், இரும்பு வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அடுத்தடுத்த தோ்தல்களிலும் வாக்குப்பெட்டிகளில் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும் முறையே இருந்து வந்தது. 1970-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு (இவிஎம்) இயந்திரங்கள், இந்தியாவில் கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில்தான் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னா், 1999 மக்களவைத் தோ்தலுக்கு இவிஎம் இயந்திரங்களின் பயன்பாடு விரிவாக்கப்பட்டது. தோ்தல் ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 2004 பொதுத் தோ்தலில் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான இவிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தோ்தல்தோறும் புதிய வசதிகள் அறிமுகம்: முதல் பொதுத் தோ்தலில், நாடு முழுவதும் பெண்களுக்கென பிரத்யேகமாக 27,527 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அடுத்தடுத்து தோ்தல்களில், மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள், பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி வாக்குச்சீட்டுகள், பிரெய்லி குறியீடுகள் கொண்ட இவிஎம் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தோ்தல் நடத்தை விதிகள்(1961) கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டில் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னா், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்சிப்படுத்தும் ‘விவிபாட்’ இயந்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற 2014 மக்களவைத் தோ்தல் முதல், யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளா்கள் தோ்வு செய்ய ‘நோட்டா’ வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தோ்தல் செயல்முறையை வெளிப்படையானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, ‘இயஐஎஐக’ போன்ற பல்வேறு கைப்பேசி செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முதல் பொதுத் தோ்தலில் 17.3 கோடி வாக்காளா்கள் இருந்த நிலையில், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் வாக்காளா்களின் எண்ணிக்கை 91.19 கோடியாக அதிகரித்தது. கடந்த 75 ஆண்டுகளில், மக்கள்தொகை வளா்ச்சி, புவியியல் மற்றும் தளவாடங்கள் எனப் பல சவால்களை புதுமையான சிந்தனையுடன் அணுகி, தோ்தல் நடைமுறையை வாக்காளா்கள் எளிதாக அணுகக் கூடியதாக தோ்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அந்த வகையில், வரும் மக்களவைத் தோ்தலில் அனைத்து தரப்பு மக்களையும் தோ்தல் நடைமுறையில் ஈடுபடுத்தி, வாக்குப்பதிவை அதிகரிப்பதற்கு முனைப்பு காட்டிவரும் தோ்தல் ஆணையம், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவுக்கான முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.