பட மூலாதாரம், AFP
இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் லிபியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளனர்.
ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக அகதிகள் ஏறிவந்த படகு லிபியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியதில் பலர் மூழ்கிப்போயினர் என லிபிய கடற்படை தெரிவித்துள்ளது.
திரிபோலிக்கு கிழக்கே உள்ள தயூராவுக்கு அருகில் 250 பேரை ஏற்றிவந்த படகு கடலில் மூழ்கியது. இதிலிருந்து 36 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் செய்தித் தொடர்பாளர் அயூஸ் காசிம் தெரிவித்துள்ளார்.
பல சடலங்கள் கடலில் மிதக்கின்றன என செய்தியாளர்களிடம் காசிம் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பாகத்தான், லிபியாவிலிருந்து இத்தாலிக்குச் செல்வதற்காக அகதிகளை ஏற்றிச் சென்ற மூன்று படகுகள் ஒன்றின் பின் ஒன்றாக மூழ்கின.
லிபியாவில் நிலவும் உள்நாட்டுக் குழப்பத்தை ஆட்கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருவதால், லிபியாவிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
அந்நாட்டுக் கடற்படையிடமும் கடலோரக் காவல்படையிடமும் போதுமான வசதிகள் இல்லாத நிலையில், மீனவர்களிடமிருந்தும் பிற அமைப்புகளிடமிருந்தும் படகுகளைக் கடன்வாங்கி அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் பெண்கள் என்றும் காசிம் தெரிவித்திருக்கிறார்.
காப்பாற்றப்பட்ட 36 பேரில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் என செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் கூறியுள்ளார்.