Last Updated:
இஷான் கிஷன் 20 பந்துகளில் 7 சிக்சருடன் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 24 ரன்களும் சேர்த்தனர்
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மும்பையில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் குவித்துள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
நவி மும்பை மைதானத்தில் நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
இஷான் கிஷன் 20 பந்துகளில் 7 சிக்சருடன் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 24 ரன்களும் சேர்த்தனர். திலக் வர்மா 45 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களும் சேர்க்க, அக்சர் படேல் 35 ரன்கள் எடுத்தார்.
ரிங்கு சிங் 16 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.
இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.


