மாலே, இந்தியா உடனான உறவு மோசமடைந்துள்ள நிலையில், முக்கியமான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என, மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு கூறியுள்ளார்.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக, சீன ஆதரவாளர் முகமது முய்சு, கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார்.
மாலத்தீவுகளில் உள்ள இந்தியப் படைகளை வெளியேறும்படி அவர் உத்தரவிட்டார். மேலும், சுற்றுலா தொடர்பான விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அந்த நாட்டின் அமைச்சர்கள் விமர்சித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க சீனாவுடன் மிகவும் நெருக்கமாக அவர் பழகி வருகிறார். ராணுவ உதவிகள் தொடர்பாக, மாலத்தீவுகள், சீனா இடையே சமீபத்தில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2019ல் கையெழுத்தான, இந்தியாவுடனான முக்கிய ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்று, முய்சு அறிவித்துள்ளார். கடந்த, 2019ல் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுகள் சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
‘ஹைட்ரோகிராபிக் சர்வே’ எனப்படும் நீருக்கடியில் உள்ள விஷயங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.
தீவு நாடான மாலத்தீவை சூழ்ந்துள்ள கடல் பகுதியில் உள்ள விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடைசியாக, 2022ல் ஆய்வுப் பணிகள் நடந்தன.
இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டில் முடிவுக்கு வருகிறது. ஆனால், அதை புதுப்பிக்கப் போவதில்லை என, முய்சு நேற்று அறிவித்துள்ளார்.
நாட்டின் வளம் குறித்து மற்ற நாடுகள் தெரிந்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த ஆய்வை சுயமாக செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்