கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளின் பலம் பலவீனம் பற்றி பார்க்கலாம்.
17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிளைமேக்ஸை எட்டியுள்ளது. முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா அணியை பொறுத்த அளவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் தகுதி சுற்றுப்போட்டியில் இதே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக கம்பீரமாக நுழைந்தது.
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்தாலும் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் இதே சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் காலடி பதித்துள்ளது.
இதையும் படிக்க:
வலை பயிற்சியை ரத்து செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – வெளியான காரணம்
கொல்கத்தா அணி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. 2012 மற்றும் 2014 ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். 2021 இறுதி யுத்தத்தில் சி.எஸ்.கே – விடம் கோப்பையை பறிகொடுத்தனர்.
ஹைதராபாத் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. 2016 ம் ஆண்டு கோப்பையை வென்று அசத்திய ஹைதராபாத் தற்போது இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டவுள்ளது. இந்த அணியும் 2018ம் ஆண்டு சி.எஸ்.கே விடம் இறுதியுத்தத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினரைப் பொறுத்தவரை பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என மூன்றிலும் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தை நன்கு அறிந்த கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் அகமத், மார்க்ரம் ஆகிய மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி தகுதிச் சுற்றில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தார். சுழற்பந்து வீச்சு ஒருபுறம், வேகப்பந்துவீச்சில் யார்க்கர் மன்னன் நடராஜன், பேட் கம்மின்ஸ் கூட்டணி பவர்பிளேயிலும், டெத் ஓவரிலும் எதிரணிக்கு அச்சுறுத்தலே.
இதையும் படிக்க:
மெரினாவில் போட்டோ ஷூட் நடத்திய கொல்கத்தா – ஐதராபாத் கேப்டன்கள்
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, டிரேவிஸ் ஹெட், கிளாசன் என அதிரடி நாயகர்கள் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர்.
கொல்கத்தா அணி வீரர்களும் பேட்டிங் பௌலிங்கில் வலுவாக அசுர பலத்துடன் திகழ்கின்றனர். பேட்டிங்கில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயர், ரஸல் மற்றும் ரிங்கு சிங் என அனைவரும் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதே போல் முக்கிய போட்டிகளில் அசுரனாக மாறும் ஸ்டார்க்கும் எதிரணியை மிரட்ட காத்திருக்கிறார். சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி எதிரணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தும் துருப்புச்சீட்டு என கேப்டன் ஷ்ரேயஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
போட்டிக்கு முந்தைய நாள் சேப்பாக்கத்தில் மழை பெய்ததால் இரு அணி வீரர்களாலும் பயிற்சியில் ஈடுபடமுடியவில்லை. இரண்டு அணிகளுமே அசால்டாக 200 ரன்களுக்கு மேல் அடிக்கக்கூடியவை என்பதால் சரவெடிக்கு பஞ்சம் இருக்காது.
இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் 27 முறை நேருக்கு நேர் மோதியதில் 18 போட்டிகளில் கொல்கத்தா அணியும் ஒன்பது போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியும் வெற்றி வாகை சூடியுள்ளன.
இரு அணிகளிலும் நடராஜன், வருண் சக்கரவர்த்தி என தமிழ்நாடு வீரர்கள் இருப்பதால் யார் கோப்பையை தட்டித் தூக்கப்போகிறார்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
.