Last Updated:
ஐபிஎல் 2026 மினி ஏலம் டிசம்பர் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் அபுதாபியில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் அடுத்த சீசனையொட்டி மினி ஏலம் இன்னும் சில நாட்களில் நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஐபிஎல் 2025 சீசனில் பிளேஆஃப்களைத் தவறவிட்ட நிலையில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் வீரர்களைத் தக்கவைக்கும் முடிவை சமர்ப்பிக்க உள்ளது.
அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் இணைந்து, அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான டிரெவிஸ் ஹெட் மற்றும் வளர்ந்து வரும் வீரரான அபிஷேக் சர்மா ஆகியோரும் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இவர்களைத் தவிர, அணி நிர்வாகம் இஷான் கிஷன், நித்திஷ் குமார் ரெட்டி, ஆடம் ஜாம்பா உள்ளிட்ட மேலும் பல முக்கிய வீரர்களைத் தக்கவைக்க திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் ஏலத்தின்போது பெரிய தொகையை சேமிக்கும் நோக்கத்தில், அணியின் மிகப்பெரிய முடிவாக, ஃபார்மில் உள்ள விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசன் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரூ. 23 கோடி வரை சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பர்ஸிற்கு கிடைக்கும்.
இவருடன் சேர்ந்து, அதிக விலைக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி (ரூ. 10 கோடி) மற்றும் ஹர்ஷல் படேல் (ரூ. 8 கோடி) ஆகியோரும் விடுவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிமரஜீத் சிங், ஜய்தேவ் உனட்கட் மற்றும் ராகுல் சாஹர் போன்ற வீரர்களும் விடுவிக்கப்படும் பட்டியலில் உள்ளனர், இதனால் ஏலத்தில் புதிய வீரர்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிகமாகும்.
November 13, 2025 2:54 PM IST


