கோலாலம்பூர்:
மலேசிய ரிங்கிட் தற்போது அமெரிக்க டாலருக்கு எதிராக RM 4.16 என்ற விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுவதால், ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக திகழ்கிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தபோது பலர் அரசாங்கத்தை விமர்சித்ததாகவும், ஆனால் இப்போது நாணய மதிப்பு உயர்ந்தபோது பாராட்டுகள் எவரிடமிருந்தும் வரவில்லை என்று நிதி அமைச்சராகவும் பணியாற்றும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
“கடந்த காலத்தில் ரிங்கிட் வீழ்ச்சியடைந்ததற்காக நாங்கள் பலமுறை விமர்சிக்கப்பட்டோம். ஆனால் இப்போது அது வலுப்பெற்றுள்ள நிலையில் எந்த பாராட்டுகளும் இல்லை — இதுவே சிக்கல்,”
என்று அவர் மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின்போது குறிப்பிட்டார்.
மேலும், “இன்று ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக RM 4.16 ஆக பதிவாகியுள்ளது. இது ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயம்,” என்பதை அது பறைசாற்றியுள்ளது என்று அவர் சொன்னார்.
நேற்று மாலை 6 மணியளவில், ரிங்கிட் 0.4 சதவீதம் உயர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 4.1555/1635 ஆக இருந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை முடிவில் இருந்த 4.1735/1775 விகிதத்திலிருந்து உயர்வைக் காட்டுகிறது.
இந்த எண்ணிக்கை, கடந்த 13 மாதங்களில் ரிங்கிட்டின் மிக உயர்ந்த நிலையை குறிக்கிறது — இது முன்பு 2024 அக்டோபர் 2 அன்று 4.1625 என்ற அளவுக்கு எட்டியிருந்தது.
இன்று காலை 8.01 மணி நிலவரப்படி, ரிங்கிட் மேலும் வலுப்பெற்று 4.1540/1660 ஆக இருந்தது.
அன்வார் இக்கருத்துக்களை, மடாணி பொருளாதாரக் கொள்கையின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீ காடிங் தொகுதியைச் சேர்ந்த அமீனோல் ஹுடா ஹாசன் (பி.எச்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தெரிவித்துள்ளார்.




