Last Updated:
Delhi Bomb Blast தொடர்பாக பெண் மருத்துவர் ஷாஹீனின் லக்னோ இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முஷாமில் கானேய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். லால் பாக் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்தின் காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முஷாமில் கானேய் உடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத் உல் மொமினாத் அமைப்பின் இந்திய பிரிவை ஷாஹீன் ஷாஹித் நிறுவி தலைமை வகித்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பரிதாபாத்தில் உள்ள அல் ஃபஹா பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட முஷாமில், ஷாஹீன், உமர் நபி ஆகியோர் சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும், சமீபத்தில் மருத்துவர் ஷாஹீன் அடிக்கடி ஜம்மு காஷ்மீர் சென்றதையும் டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி டெல்லி சதி வேலைக்கு ஷாஹீன் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டியுள்ள அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. இவர்கள் மருத்துவர்கள் என்ற போர்வையில் என்ஜிஓ, சமூக சேவை செய்வதாக கூறி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீனின் லக்னோ இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில், உத்தரபிரதேச காவல்துறை ATS, ஜம்மு & காஷ்மீர் காவல்துறை மற்றும் லக்னோ காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், ஃபரிதாபாத் காவல்துறையினர் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் டாக்டர் முஸம்மிலுடன் பணிபுரியும் மாணவர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். 52க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டதில், ஆறு பேரிடம் தனியாக காவல்துறையினர், பயங்கரவாதத் தொடர்பு உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
November 11, 2025 4:48 PM IST


