Last Updated:
கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார், ஹரியானாவில் இருந்து பாதர்பூர் எல்லை வழியாக நேற்று காலை டெல்லிக்குள் நுழைந்திருப்பதும், முறையான பதிவுகள் இல்லாமல் நான்கு பேரிடம் கைமாறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் முன்பு நேற்று (திங்கட்கிழமை) மாலை 6.52 மணியளவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் புதிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புக்கு அரை மணி நேரம் முன்பாக அதாவது மாலை 6.22 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அந்த கார் கடந்து சென்றது தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் பதர்பூர் எல்லை வழியாக அந்த கார் டெல்லிக்கு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் வடக்கு டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட், தர்யாகஞ்ச், சுனேஹ்ரி மஸ்ஜித் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இந்த கார் பதிவாகியுள்ளது. குறிப்பாக உயர் பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்ட பகுதிகளில் இந்த கார் வலம் வந்ததை சிசிடிவி வீடியோ மேப்பிங் முறையில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அந்த காரை ஓட்டியவர் செங்கோட்டை பகுதிக்கு வரும் முன்னர், டெல்லி பழைய ரயில் நிலையத்தில் உறவினர்களை இறக்கிவிட்டு, மாலை 3.40 மணியளவில் அங்குள்ள பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தி வைத்துள்ளார். சுமார் மூன்று மணி நேரம் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மாலை 6.45 மணி அளவில் செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதிக்கு வந்துள்ளது.
செங்கோட்டை அருகே லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம், சாந்தினி சவுக் வணிக வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. எனவே, கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாலை வரை காத்திருந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே, குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு பேரிடம் கைமாறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரை ஹரியானாவில் வசித்து வந்த முகமது சல்மான் 2014 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று வாங்கியிருக்கிறார். அவர் ஹரியானாவை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்த நிலையில், அதே முகவரியில் காரை பதிவு செய்துள்ளார்.
அதன்பின்னர் டெல்லி ஓக்லா பகுதியை சேர்ந்த தேவேந்திரா என்பவரிடம் கைமாற்றப்பட்டுள்ளது. பின்னர் சோனு மற்றும் தாரிக் ஆகியோருக்கு அடுத்தடுத்து விற்கப்பட்டுள்ளது. எனினும் காரை வாங்கியவர்கள் முறையாக பதிவு செய்யாமல் இருந்ததும் அம்பலமாகியுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த தாரிக்கிடம் இறுதியாக கை மாறியிருந்தாலும், செங்கோட்டை பகுதிக்கு காரை ஓட்டி வந்து வெடிக்கச் செய்தது மருத்துவர் உமர் நபியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்துவதற்காக காஷ்மீரில் வசிக்கும் உமர் நபியின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு ஹரியானா வழியாக டெல்லிக்குள் நுழைந்த கார், 3 மணிக்கு வடக்கு டெல்லியில் இருந்துள்ளது. இந்த இடைப்பட்ட 7 மணி நேரத்தில் அந்த கார் எங்கே சென்றது?, காரை இயக்கியதாக கூறப்படும் உமர் நபி, 7 மணி நேரத்தில் யார், யாரை சந்தித்தார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Delhi,Delhi,Delhi
November 11, 2025 12:34 PM IST
டெல்லி குண்டு வெடிப்பில் அடுத்த அதிர்ச்சி.. 7 மணி நேரத்தில் அந்த கார் எங்கே சென்றது? – விசாரணையில் ஷாக்!


