Last Updated:
ரிச்சா கோஷின் அதிரடியான பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதியாட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு ஏராளமான பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிச்சா கோஷ் 2025 மகளிர் உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி, 39.16 சராசரியுடன் 235 ரன்கள் எடுத்தார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், 7வது வீராங்கனையாக பேட்டிங் செய்து, 24 பந்துகளில் 34 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட) எடுத்தார்.
ரிச்சா கோஷின் அதிரடியான பேட்டிங் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அவரை கவுரவப்படுத்தும் வகையில் வங்க பூஷன் விருதை மாநில அரசு வழங்கியது.
மேலும் அவருக்கு டி.எஸ்.பி. பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ரிச்சா கோஷின் சொந்த ஊரான வடக்கு வங்கத்தின் சிலிகுரியில், ‘ரிச்சா கிரிக்கெட் மைதானம்’ கட்டப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது சந்மணி தேயிலைத் தோட்டத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இது மாநில அரசால் விரைவில் தொடங்கப்படும்.
November 10, 2025 9:58 PM IST


