Last Updated:
ஹரியானா வாக்கு முறைகேடு குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு, “ரூபாய் நோட்டுகளை திருடுபவர்கள் ஓட்டுத் திருட்டை பற்றி பேசுவார்களா?” என பதில் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 5ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி ஹரியானா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி நடந்துள்ளது. வாக்கு முறைகேடு நடந்துள்ளது எனக் கூறினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு குறித்து ஜென்சி இளம் தலைமுறையினர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக முறையை 100 சதவிகிதம் ஆதாரத்துடன் தான் கேள்வி கேட்பதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஹரியானாவில் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாகக் கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ராகுல் காந்தி நாட்டின் எதிரி. நாட்டின் எதிரிகள் ராகுல் காந்தியை விதைத்துவிட்டனர். நீதித்துறையையும், ராணுவத்தையும் பலவீனப்படுத்தி, பொதுமக்களிடையே மோதலை உருவாக்குங்கள்.
அவர் முட்டாள்தனமாகப் பேசுகிறார், தேசத்துரோகம் பற்றிப் பேசுகிறார். ராகுல் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் வெளிநாடு செல்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது அரசாங்கம் இதைப் பற்றி விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், இந்த விவகாரம் குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இளம் தலைமுறையினர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நிற்கின்றனர். இதைத் திசைதிருப்பவும், நம் நாட்டை அவமதிக்கவும், ராகுல் காந்தி தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து இந்தச் சதித்திட்டங்களை செய்கிறார். இந்தச் சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.
ராகுல் காந்தி பாஜகவை மட்டுமல்ல, நமது நாட்டின் அமைப்பையும் அதன் நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் குறிவைக்கிறார். தேர்தல் ஆணையம், நமது ஜனநாயக அமைப்பு மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது என்பது, நீங்கள் நமது நாட்டையும், அதன் அமைப்பையும் குறிவைக்கிறீர்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் கடந்த இரு நாட்களாக இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
#WATCH | Patna | On Lok Sabha LoP Rahul Gandhi’s ‘Vote Chori’ allegations, Maharashtra Dy CM Eknath Shinde says, “Will those who steal notes talk about vote theft?… Even in Haryana, after 1.5 years of elections, he is talking about vote theft. He has come to know that they… pic.twitter.com/nzfILkhpt4
— ANI (@ANI) November 7, 2025
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஏக்நாத் ஷிண்டே, “ரூபாய் நோட்டுகளை திருடுபவர்கள் ஓட்டுத் திருட்டை பற்றி பேசுவார்களா? ஹரியானாவில் தேர்தல் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அவர், வாக்குத் திருட்டு பற்றிப் பேசுகிறார். பீகாரில் அவர்கள் (மகாத்பந்தன்) தோற்கப் போகிறார்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டார். அதனால், அவர் அதற்கான களத்தைத் தயார் செய்கிறார்” எனத் தெரிவித்தார்.
November 07, 2025 9:56 PM IST


