Last Updated:
மிஹர் ராஜேஷ் ஷா வழக்கில் உச்சநீதிமன்றம், கைது காரணம் நபருக்கு அவரது மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் கைது சட்டவிரோதம் எனவும் தீர்மானித்தது.
கைது செய்யப்படும் நபர் தான் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்ற விவரத்தை சம்பந்தப்பட்டவருக்கு தெரிந்த மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிஹர் ராஜேஷ் ஷா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தான் கைது செய்யப்பட்டபோது எதற்காக கைது செய்யப்பட்டோம் உள்ளிட்ட எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை, எனவே தனது கைது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், வழக்கில் ஒருவர் கைது செய்யப்படும் போது எந்த குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார் மற்றும் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் காவல்துறையினர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஒருவேளை கைதுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்க இயலவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் 2 மணி நேரத்திற்கு முன்பாக அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக அவரது மொழியில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த நடைமுறை என்பது சட்டவிரோத பண பரிவர்த்தனை, UAPA சட்டத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து ஐ.பி.சி வழக்குகளுக்கும் பொருந்தும் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
ஒருவேளை கைது செய்யப்படுவதற்கான காரணம் எடுத்து பூர்வமாக சம்பந்தப்பட்ட நபருக்கு அவரது மொழியில் கொடுக்கப்படவில்லை என்றால் அந்த கைது நடவடிக்கை என்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்படுவார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Delhi,Delhi,Delhi
November 07, 2025 5:12 PM IST


