Last Updated:
உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிரதமர் மோடி வாழ்த்தினார். ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா, ஹர்லீன் தியோல், அருந்ததி, ஹர்மன்ப்ரீத் கவுர் கலந்து கொண்டனர்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, நாட்டு மக்களின் வாழ்வியலோடு கலந்தது என்று தெரிவித்துள்ளார்.
13ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் உலகக் கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பிரதமர் மோடி அனைத்து வீராங்கனைகளுக்கும் லட்டு வழங்கினார். அப்போது, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா லட்டு எடுக்க சென்ற போது, அவருக்கு பிடித்த பேல் பூரி அங்கே இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். தனக்கு பிடித்ததை அறிந்து பிரதமர் கூறியதை கேட்டு, ஸ்மிருதி மந்தனா சற்று திகைத்து போனார்.
இதே போன்று, காலில் அடிபட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த வீராங்கனை பிரதிகா ராவலுக்கு, தேவையான உணவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து சென்று வழங்கினார். பின்னர், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயம் அடைந்தது குறித்து பிரதமர் வினவியதற்கு பிரதிகா ராவல் பதில் அளித்தார்.
இதே போன்று, பிரதமரிடம் பேசிய நட்சத்திர வீராங்கனை ஜெமிமா, அரையிறுதி சுற்றில் தான் அடித்த சதம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
பிரதமரின் முகப்பொலிவிற்கான காரணம் என்ன என்று ஹர்லீன் தியோல் கலகலப்பாக கேட்டார். அதற்கு, லட்சக்கணக்கான மக்களின் அன்பும் ஆசீர்வாதமும் தான் காரணம் என பதில் அளித்தார். இதே போன்று, தனது தாயின் ஹீரோ தாங்கள் தான் என வீராங்கனை அருந்ததி குறிப்பிட்டார்.
கடந்த முறை, கோப்பை இன்றி பிரதமரை சந்தித்ததை நினைவு கூர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தற்போது கோப்பையுடன் சந்தித்தது பெருமை அளிப்பதாக குறிப்பிட்டனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒன்று என்று குறிப்பிட்டார்.
இந்த தருணத்திற்காக கடந்த 2 ஆண்டுகளாக வீராங்கனைகள் முழு முயற்சியுடன் போராடி வந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் குறிப்பிட்டார். பிகார் தேர்தல் களத்திலும், கிரிக்கெட் களத்திலும் பரபரப்பாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக கலந்துரையாடிய காணொளி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
November 06, 2025 4:58 PM IST
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுடன் பிரதமர் பேசியது என்ன? மோடியின் செயலால் திகைத்த ஸ்மிருதி மந்தனா!


