Last Updated:
ஜம்மு & காஷ்மீரில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தைபா, ஜெய்ஷ்-இ-முகமது குழுக்கள் மீண்டும் தாக்குதல் திட்டமிட்டுள்ளன என உளவுத்துறை எச்சரிக்கை.
ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை குறிவைத்து பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதாக ஆங்கில தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீர், பஹல்காம் சுற்றுலாதளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், மொத்தம் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இதனை அடுத்து, இந்திய அரசு, பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானும், இந்தியா மீது நடவடிக்கை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகள் மீது குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதில், இந்திய இராணுவம் குறிவைத்த பயங்கரவாதிகள் நிலைகள் தகர்க்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை அடுத்து, பாகிஸ்தான் ராணுவம், இந்திய கிராமங்களின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால், அவை அனைத்தையும் இந்திய இராணுவம் முறியடித்தது என இந்திய இராணுவம் அறிவித்தது.
அதனையடுத்து, இரு நாடுகளின் பதில் தாக்குதலால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் உருவானது. தொடர்ந்து தாக்குதல் நடந்துவந்த சூழலில் அதன்பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து தற்போது பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் ஜம்மு & காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்திருப்பதாக ஆங்கில தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்ரேஷன் சிந்தூரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள், குறிப்பாக லஷ்கர்-இ-தைபா (எல்இடி) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஎம்) ஆகியவை ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் முதல் பயங்கரவாதக் குழுக்கள் ஊடுருவல், உளவு பார்த்தல் மற்றும் எல்லை தாண்டிய தளவாடங்களை முடுக்கிவிட்டதாக தனியார் தேசிய தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக பல எல்இடி மற்றும் ஜெஎம் பிரிவுகள் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவல் பாதைகள் வழியாக ஜம்மு & காஷ்மீருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
November 06, 2025 9:14 PM IST
ஜம்மு & காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்… ஆப்ரேஷன் சிந்தூருக்கு பழிவாங்க திட்டம்!


