Last Updated:
“பிகார் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியும். வாக்குகளை திருடிதான் அவர்களால் வெல்ல முடியும்” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
பிகாரில் என்டிஏ கூட்டணியால் வெற்றி பெற முடியாது என பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் தெரியும் என்றும் அதனால் அவர்கள் வாக்கு திருட்டை கையில் எடுப்பார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பிகாரின் அவுரங்காபாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் அரசாங்கத்திடம் கேள்வி கேட்க கூடாது என்பதற்காக இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் பிசியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார் என்றார்.
என்டிஏ கூட்டணி வெற்றிபெற வாக்குத் திருட்டு தான் ஒரே வழி என்றும் அவர் விமர்சித்தார். மேலும், 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் ஆட்சியில் இருந்ததை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இத்தனை ஆண்டுகளில் பிகார் மாநிலம் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்றார்.
நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கெல்லாம் பிகார் மக்கள் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்று கூறிய ராகுல் காந்தி, வாழ்நாள் முழுவதும் இப்படி கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களாக இருக்க தான் பிகார் இளைஞர்கள் விரும்புகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரச்சாரத்தில் வாக்குத் திருட்டு குறித்து பேசிய ராகுல் காந்தி, “பிகார் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியும். வாக்குகளை திருடிதான் அவர்களால் வெல்ல முடியும். ஏற்கனவே மகாராஷ்டிரா, ஹரியானா, மக்களவைத் தேர்தல்களில் அவர்கள் வாக்குகளை திருடினர்.
தற்போது பிகாரில் வாக்குகளை திருட முயற்சிக்கின்றனர். ஆனால், பிகார் மக்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். யாராலும், பிகார் மக்களின் வாக்குகளை திருட முடியாது” எனப் பேசினார்.
November 04, 2025 6:02 PM IST


