Last Updated:
கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சட்டப் போராட்டம் நடத்த முடிவு.
இந்தியத் தேர்தல் ஆணையம், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். எனப்படும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தப் பணி நேற்று (4ஆம் தேதி) முதல் துவங்கி நடந்து வருகிறது. இதனை எதிர்த்து திமுக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.
ஆன்லைன் வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், கடந்த மக்களவைத் தேர்தலின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும்போது, 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலைத் திருத்துவது அறிவியல் ரீதியானது அல்ல என்றும், தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவைத் தவிர கேரளாவின் மற்ற அனைத்துக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
November 05, 2025 10:08 PM IST


