இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அவர் (ராகுல் காந்தி) ஜென்சி (இளம் தலைமுறையினர்) தூண்டுவது பற்றிப் பேசுகிறார். நம் நாட்டு மக்கள் புத்திசாலிகள். உலகம் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா 7%க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியில், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், இளம் தலைமுறையினர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நிற்கின்றனர்.
இதைத் திசைதிருப்பவும், நம் நாட்டை அவமதிக்கவும், ராகுல் காந்தி தேச விரோத சக்திகளுடன் சேர்ந்து இந்தச் சதித்திட்டங்களை செய்கிறார். இந்தச் சதித்திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது.
நாங்கள் தொடர்ந்து போராடி வென்றோம். ஒருபோதும் நாங்கள், ஜனநாயக அமைப்பை கேள்வி எழுப்பியதில்லை. நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தை நாங்கள் எப்போதும் அவமதித்ததில்லை. எங்கேனும் தவறு இருந்தால், நாங்கள் நீதிமன்றத்தை நாடி, வழக்கு தாக்கல் செய்வோம், தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். ஆனால், எப்போதுமே நமது ஜனநாயக அமைப்பை அவமதித்ததில்லை.
இவர்கள் (காங்கிரஸ்) வெளிநாடுகளுக்குச் சென்று நம் நாட்டின் அமைப்பையும், நாட்டையும் அவமதிக்கிறார்கள். தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் காங்கிரஸ் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சாமானியர்கள் எவ்வாறு வெற்றி பெற்றனர்? எதிர்க்கட்சிகள் எத்தனை முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன? நாம் எப்போதாவது அதை கேள்வி கேட்டிருக்கிறோமா?
ராகுல் காந்தி பாஜகவை மட்டுமல்ல, நமது நாட்டின் அமைப்பையும் அதன் நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் குறிவைக்கிறார். அவர் ராணுவத்தை குறிவைத்ததை நீங்கள் பார்த்திருக்கலாம். பின்னர், நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமாக இல்லாவிட்டால், அவர் உச்ச நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் தாக்குவார்.
தேர்தல் ஆணையம், நமது ஜனநாயக அமைப்பு மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது என்பது, நீங்கள் நமது நாட்டையும், அதன் அமைப்பையும் குறிவைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இது நன்கு திட்டமிடப்பட்ட சதி. பல சக்திகள் உள்ளன என்று நான் முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இதுபோன்ற பலர் உள்ளனர். இந்தியாவின் பிம்பத்திற்கு தீங்கு விளைவிக்க அவர்கள் ராகுல் காந்தியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
November 05, 2025 5:16 PM IST
“தேர்தல் ஆணையத்தை கேள்விக்குள்ளாக்குவது.. காங்கிரஸ் நாட்டை அவமதிக்கிறது” – அமைச்சர் கிரண் ரிஜிஜு

