ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த 60 வயதான அக்தர் ஹுசைனி என்ற அந்த நபர், BARC விஞ்ஞானியாக நடித்து நாடு முழுவதும் பயணம் செய்து வந்த நிலையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் டெல்லியில் வைத்து அவரது சகோதரர் அடில் ஹுசைனியையும் போலீசார் கைது செய்தனர்.
போலி அடையாள அட்டை
அணு ஆயுதங்கள் தொடர்புடையதாகக் கூறப்படும் பத்துக்கும் மேற்பட்ட வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் இவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். போலி பாஸ்போர்ட்கள், ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் போலியான BARC அடையாள அட்டையும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் கூறுகிறார்கள்.
ஹுசைனிடம் இருந்த ஒரு அடையாள அட்டையில், “அலி ராசா ஹுசைன்” என்றும், மற்றொன்றில் அவரது பெயர் “அலெக்சாண்டர் பால்மர்” என்றும் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பல ஆண்டுகளாக பல மாற்றுப்பெயர்கள் மற்றும் போலி சான்றுகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாக வட்டாரங்கள் போலீஸ் தெரிவிக்கின்றன.
1995-ம் ஆண்டிலேயே ஹுசைனி சகோதரர்கள் வெளிநாட்டு நிதியைப் பெறத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் லட்சக்கணக்கில் பணம் பெற்ற இவர்கள், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் அணுசக்தி நிலையங்களுடன் இணைக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் தரவுகளை தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் சுருட்டியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வங்கி பரிவர்த்தனைகள்
அக்தர் ஹுசைனியின் பெயரில் இருக்கும் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றில் கண்டுபிடித்தனர், சந்தேகத்திற்குரிய வகையில் அதிகபட்ச பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு எப்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்பதை கண்டறிய வைப்புத்தொகை மற்றும் பரிமாற்றங்கள் குறித்த முழு விவரங்களையும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இத்தனை ஆண்டுகளில் பல வங்கிக் கணக்குகளை சகோதரர்கள் இருவரும் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முழு பணப் பரிவர்த்தனையை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது. மேலும் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாகிஸ்தான் தொடர்பு
முதற்கட்ட விசாரணையில், இருவரும் பாகிஸ்தானுக்குச் சென்று இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸுடன் (ஐஎஸ்ஐ) தொடர்புகளைப் பேணி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸ் கண்ணிலிருந்து தப்பிப்பதற்காக ஹுசைனி பலமுறை தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டதாகவும் இந்திய அணுசக்தி ஆவணங்களை வைத்திருந்த விஞ்ஞானி என்று கூறிக்கொண்ட பின்னர் 2004-ம் ஆண்டில் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
அவர் 1996-ம் ஆண்டு ஜார்க்கண்டில் உள்ள தனது மூதாதையர் சொத்தை விற்று அதன் முகவரியைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கி வந்தார் என்றும் வெளிநாடு செல்ல ஹுசைனி முகமது அடில் மற்றும் நசிமுதீன் சையத் அடில் ஹுசைனி போன்ற மாற்றுப் பெயர்களில் வழங்கப்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்தியதாகவும் போலீசார் நம்புகின்றனர்.
போலியான அடையாளம், சட்டவிரோத முறையில் நிதியுதவி மற்றும் தேசிய பாதுகாப்புத் தகவல்களில் சமரசம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற நீண்டகால உளவு மற்றும் மோசடியை வெளிக்கொணர்வதில் இந்த கைதுகள் முக்கியமானதாக இருக்கும் என்று போலீசார் கூறுகின்றனர்.
November 05, 2025 11:05 AM IST

