Last Updated:
சத்தீஸ்கர் Gevra அருகே புறநகர் ரயில் சரக்கு ரயிலில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 15 பேர் காயம். ரயில்வே நிவாரணம் அறிவிப்பு, விஷ்னு தியோ சாய் நடவடிக்கை.
சத்தீஸ்கரில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறமாக புறநகர் ரயில் மோதிய விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கவனக்குறைவுடன் புறநகர் ரயில் சிக்னலை கடந்துசென்றதே விபத்துக்கான காரணம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கரின் கொர்பா மாவட்டத்தில் உள்ள Gevra ரயில் நிலையத்தில் இருந்து பிலாஸ்பூர் நோக்கி புறநகர் ரயில் சென்று கொண்டிருந்தது. பிலாஸ்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே Gatora பகுதியில் ரயில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் நின்றிருந்த சரக்கு ரயிலின் கடைசி பெட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயில் மீது மோதிய வேகத்தில் புறநகர் ரயிலின் என்ஜின் மற்றும் முதல் பெட்டியில் கடும் சேதம் ஏற்பட்டு, அதில் அமர்ந்திருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்புப் படையினர், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்ததால், அந்த தண்டவாளத்தில் சிவப்பு நிற சிக்னல் போடப்பட்டிருந்த நிலையில், அதனை கவனிக்காமல் புறநகர் ரயிலை என்ஜின் ஓட்டுநர் ஓட்டியது தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரயில்வே தரப்பில் தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், லேசான காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றதால் மும்பை – ஹவுரா இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்னு தியோ சாய், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
November 05, 2025 7:31 AM IST
சரக்கு ரயில் மீது புறநகர் ரயில் மோதி கோர விபத்து.. 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன?


