சோல்:
தென்கொரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் வட்டார ரீதியான அச்சுறுத்தல்களை சமாளிக்க நெகிழ்வான நடவடிக்கைத் திட்டங்கள் வகுக்கப்படும் என அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்தார்.
எனினும், அமெரிக்காவின் முதன்மை கவனம் வடகொரியாவைத் தடுப்பதில்தான் இருக்குமென அவர் வலியுறுத்தினார்.
தென்கொரியாவுக்குச் சென்றிருந்தபோது, ஹெக்செத் தனது தென்கொரிய இணை அமைச்சர் ஆன் கியூ-பேக்-ஐ சந்தித்து இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை குறித்து கலந்துரையாடினார். அதன்பின் அவர், வட மற்றும் தென்கொரியாவுக்கிடையிலான ராணுவமற்ற மண்டலத்திற்குச் (DMZ) சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
சீனா அல்லது தைவான் தொடர்பான பிராந்திய சச்சரவுகளில் தென்கொரியாவில் உள்ள 28,000 அமெரிக்க வீரர்களை பயன்படுத்தும் யோசனையை, தென்கொரியா எதிர்த்து வந்தது. அதற்கு பதிலளித்த ஹெக்செத், “அமெரிக்காவின் முன்னுரிமை தென்கொரியாவை அணு ஆயுதம் கொண்ட வடகொரியாவின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பதுதான்” என்றார்.
இந்நிலையில், தென்கொரியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அணு ஆற்றல் இயக்கமிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஹெக்செத் கூறுகையில், “அமெரிக்கா–தென்கொரியா உறவை மேலும் வலுப்படுத்துவது நமது முக்கிய நோக்கம். இந்தக் கூட்டாண்மை பிராந்திய அமைதிக்குத் தேவையானது” என்றார்.
தென்கொரியா தற்போது சுமார் 4.5 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கும் நிலையில், 2030களின் நடுப்பகுதிக்குள் தனது முதல் அணு நீர்மூழ்கிக் கப்பலைச் செயல்படுத்தும் இலக்கை வகுத்துள்ளது.



