Last Updated:
ஹரியானா பரிதாபாத் பல்லப்பரில் ஜதின் மங்கலா, போட்டித் தேர்வுக்கு சென்ற 17 வயது மாணவி மீது துப்பாக்கி சூடு நடத்தியது சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹரியானா மாநிலத்தில் பட்டப்பகலில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த மாணவி மீது, இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்பர் பகுதியில் 17 வயது மாணவி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்துள்ளார். அதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்த அவர், சம்பவத்தன்று பல்லப்நகர் பகுதியில் உள்ள ஷியாம் காலணி வழியாக தனது சகோதரியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கை சாலையில் நிறுத்தி அதன் அருகில் பதற்றத்துடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அந்த மாணவி வருவதை பார்த்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்று சற்றும் எதிர்பாராத சூழலில் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். முதல்குண்டு மாணவியின் தலைமுடியில் பட்டு செல்ல இரண்டாவது குண்டு அவரது கை விரல்களை துளைத்துக் கொண்டு தோள்பட்டையில் பாய்ந்துள்ளது. இதில் பயந்து போன அந்த மாணவி கதறி அழுத படி ஓட ஆரம்பித்தார்.
அந்த நபரோ எதுவும் நடக்காதது போல் அவரது பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவியின் சகோதரி ஆகியோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் துப்பாகி சூடு நடத்திய நபர் ஜதின் மங்கலா எனத் தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அவர் தொடர்ந்து ஒருதலையாகக் காதல் தொல்லை கொடுத்து வந்தததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே துப்பாக்கி சூடு நடத்திய நபரின் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது ஜதின் மங்கலாவின் பெற்றோர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் போலீசில் புகார் அளிக்காமல் விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
November 04, 2025 8:37 PM IST
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த மாணவி மீது துப்பாக்கிச் சூடு.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!


