Last Updated:
கர்நாடகத் தேர்தலில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
கர்நாடகத் தேர்தலின்போது வாக்குத் திருட்டு நடைபெற்றது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் முறைகேடாகச் செயல்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். குறிப்பாக மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாகவும், கர்நாடகா நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக கர்நாடகாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் எடுத்து ஆய்வு செய்ததாகவும், அதில் பெரும் அளவு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, பெங்களூருவில் ஒற்றை படுக்கை அறை வசதி கொண்ட வீட்டின் முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆய்வில் அங்கு யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், பாஜகவின் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் ரோஹித் பாண்டே, வாக்குத் திருட்டு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக முறையிடுமாறு கூறியதுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
October 13, 2025 8:46 PM IST
பரபரப்பைக் கிளப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!


