“இதுவரை தங்கம் விற்பனைக்கு கிடைத்து வந்த வரிச் சலுகை இனி கிடைக்காது’ என்று சீன தங்க நிறுவனங்களுக்கு சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்பு, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து, தங்கம் வாங்கினால் மதிப்பு கூட்டு வரி (VAT) கட்ட வேண்டியதாக இருக்கும். பின், அதே தங்கத்தை விற்கும்போது, இந்த வரியை மீண்டும் கட்ட வேண்டியதில்லை. தற்போது இந்த வரிச் சலுகை தான் நிறுத்தப்பட்டுள்ளது.
இனி ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து தங்கம் வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி மதிப்பு கூட்டு வரி கட்ட வேண்டும்.
இது கடந்த 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
வாங்கிய தங்கத்தை அப்படியே விற்றாலும் அல்லது அந்தத் தங்கத்தை நாணயம், நகை என எந்த விதமாகவும் விற்றாலும், எதுவாக இருந்தாலும் இந்த நடைமுறை பொருந்தும்.
இது எப்படி சீன வர்த்தகத்தை பாதிக்கும்?
இந்த வரிச் சலுகை ரத்தை சீன தங்க நிறுவனங்கள் எப்படியும் வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டுவார்கள்.
இந்த ரத்தினால் ஏற்படும் விலை உயர்வு சீன வாடிக்கையாளர் தங்கம் வாங்கும்போது பிரதிபலிக்கும். இதனால், சீனாவில் தங்கத்தின் டிமாண்ட் குறையும். மக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள். இதனால், தங்கம் விலையும் குறையலாம்.

