Last Updated:
பிகார் தேர்தலில் பாஜக 71 வேட்பாளர் பட்டியல் வெளியீடு, 9 பெண்கள் இடம் பெற்றனர்.
பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 71 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பாஜக, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் களம் காண்கின்றன.
இந்தக் கூட்டணியில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சிகளுக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்திற்குப் பின் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 9 பெண்கள் உட்பட 71 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிகார் துணை முதலமைச்சருமான சாம்ராட் சௌத்ரி தாரபூர் தொகுதியிலும், மற்றொரு மூத்த தலைவரான ராம்கிரிபால் யாதவ் தனாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
101 தொகுதிகளில் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக இன்று வெளியிட்டுள்ள பாஜக, மீதமுள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்த வார இறுதியில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்திற்குப் பிறகு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
October 14, 2025 3:28 PM IST


