Last Updated:
இரண்டாவது அணி எது என்பதில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இறுதிப் போட்டியில் இரு அணிகள் மோதுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆசியாவை சேர்ந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 போட்டிகள் கொண்டதாக இந்த சுற்று நடைபெறுகிறது.
இதில் முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் வென்றது. அதை தொடர்ந்து நடந்த இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ளன. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த ஆறு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. நாளை நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 2 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு வரும்.
தற்போதைய சூழலில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் அடுத்தடுத்து தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதேபோன்று செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியும், செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியும், செப்டம்பர் 26 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற வேண்டும். இவை நடந்தால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. இந்திய அணி வலுவாக இருப்பதால் இவை இரண்டிலும் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான போட்டியும், செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியும் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையும்.
September 22, 2025 4:42 PM IST


