Last Updated:
டெல்லியில் காற்று தரக்குறியீடு 400ஐ தாண்டி, எய்ம்ஸ் பகுதியில் 421 ஆக உயர்ந்தது. மக்கள் சிரமம், அரசு கடும் நடவடிக்கை, நிபுணர்கள் மேலும் எச்சரிக்கை வழங்கினர்.
டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் குளிர் காலம் தொடங்கியதில் இருந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையை எட்டி வருகிறது.
இந்நிலையில், இன்று டெல்லியின் பல இடங்கள் காற்றுத்தர அளவுக் குறியீடு மோசமான நிலையை எட்டியது. காற்று தரக்குறியீடு 100 ஐ தாண்டினாலே மோசமான நிலையாகக் கருதப்படும் சூழலில் சாந்தினி சவுக், துவாரகா செக்டார், அசோக் விஹார் பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 400ஐ தாண்டியது. அதிகபட்சமாக எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் காற்றின் தரக்குறியீடு அளவு 421 ஆக பதிவானது.
அதீத காற்று மாசுபாட்டால் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் இதயப் பிரச்னை உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெளிவாக தெரியாத சூழல் காணப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் குறைக்க தெருக்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு கீழ் வராத வெளியூர் கனரக வாகனங்கள் அனுமதி மறுப்பு போன்ற கடும் நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. வலிமையான வடமேற்கு காற்று அல்லது மழை இல்லாதபட்சத்தில் காற்றின் தரக்குறியீடு இன்னும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
November 02, 2025 12:32 PM IST


