ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஆக்ரோஷத்தைப் பார்த்தவர்கள், இறுதிப் போட்டியைக் காண துடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ஆட்டத்தைப் பற்றி அறிந்த மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வமற்றவர்கள் கூட ஹைலைட்ஸ் பார்த்து இந்திய அணிக்கு பரம விசிறிகளாக மாறிப் போய்விட்டனர், அனைவரது கவனமும் நவிமும்பையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டி மீதே பதிந்திருக்கிறது.
இதுவரை 12 முறை 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை நடைபெற்றிருக்க அதில் 2 முறை இறுதிப் போட்டியை அடைந்தும் வெறுங்கையுடன் திரும்பிய இந்திய அணியும், இறுதிப் போட்டி பக்கமே வந்திராத, தென்னாப்பிரிக்க அணியும் கோப்பையை முதல் முறையாக வென்றுவிட கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றன.
இந்தியாவை பொருத்தவரை லீக் போட்டிகளில் மிகவும் போராடியே அரையிறுதியை எட்டியது. ஆனால் அரையிறுதியில் விஸ்வரூபம் எடுத்த இந்திய மகளிர், வீழ்த்தவே முடியாது என்றிருந்த, ஆஸ்திரேலிய அசகாயசூரிகளை, அதிர்ச்சியடைய வைத்தனர் . அனுபவம் வாய்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும், இளமையும் துடிப்பும் உடைய ஜெமிமாவும் சிறப்பாக விளையாடி உலக சாதனை இலக்கான 339-ஐ சாத்தியமாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.
இந்திய அணியில் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா, சூப்பர் ஸ்டார் ஸ்மிருதி மந்தனா, ரைசிங் ஸ்டார் ஜெமிமா, பவர் ஹிட்டர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், அமன்ஜோத் என பேட்டர்களுக்குப் பஞ்சம் இல்லை. வேகப்பந்து வீச்சு மட்டும் கொஞ்சம் வீக் ஆக இருந்தாலும், ஸ்ரீசரணி, ராதா யாதவ் போன்ற திறமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவும் தன் பேட்டிங்கைப் போலவே கில்லாடி.
மொத்தத்தில் இந்திய அணிதான் ஹாட் பேவரைட்டாக உள்ளது. ஆனால் தென்னாப்ரிக்க அணியை லேசாக எடைபோட்டுவிடக் கூடாது. லீக் சுற்றுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ரன்களிலும், இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்களுக்கும் சுருண்ட தென்னாப்பிரிக்கா, அரையிறுதியில் நான்கு முறை உலக சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர வைத்தது.
கடந்த ஆண்டு இந்தியா சுற்றுப் பயணம் செய்து நம்மூர் மைதானங்களை நன்கறிந்து வைத்திருக்கின்றனர் தென்னாப்ரிக்க மகளிர். மேலும் கேப்டன் லாரா உல்வார்ட் இந்தியாவுக்கு எதிராகத்தான் அதிக ரன் சராசரியை வைத்திருக்கிறார் என்பதும் கவலை தரும் விஷயம். அனுபவ வீராங்கனை மரிசேன் கேப், நேடின் டிளர்க் போன்ற பேட்டர்களும் தலைவலிதான்.
அதுமட்டுமின்றி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 3 போட்டிகளில் தென்னாப்ரிக்கா வெற்றி கண்டிருக்கிறது. அதனால் அவர்களை இந்தியா பழிதீர்க்க சரியான தருணம் இது. அதுமட்டுமல்லாம் உள்நாட்டில் ஆடும் போட்டி என்பதும் பலம்.
போட்டியில் வென்றால் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை தர பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாழ்நாளில் ஒரு வாய்ப்பு என்பார்கள் அதுபோல், தலைசிறந்த கரியரைக் கொண்ட 36 வயது ஹர்மன்ப்ரீத் தன் கடைசி உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை முத்தமிட வேண்டும் என்பதே பல கோடி இந்தியர்களின் கனா.
தென்னாப்ரிக்காவுக்கும் அரிய வாய்ப்பை தவறவிட விரும்பாது. கோப்பையை முதல் முறையாக முத்தமிடப் போகும் அணி எது…இன்று இரவு வரை காத்திருப்போம்!
November 02, 2025 7:21 AM IST

