Last Updated:
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தின்போது கோழி மற்றும் ஆட்டிறைச்சி உணவுகளை மக்கள் சாப்பிடுவதைக் காட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது.
குஜராத்தின் சூரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் வளாகத்தில் அனுமதியின்றி அசைவ விருந்து நடத்தியதாகக் எழுந்த குற்றச்சாட்டில், குறிப்பிட்ட பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும், அவர் மீது துறைரீதியிலான விசாரணையையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோதாதரா பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி எண்.342-ல் (பண்டிட் தீன்தயாள் தொடக்கப் பள்ளி) நடந்த ஒரு கூட்டத்தின்போது கோழி மற்றும் ஆட்டிறைச்சி உணவுகளை மக்கள் சாப்பிடுவதைக் காட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது.
இப்போதெல்லாம் குறிப்பிட்ட பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி ரீயூனியன் மீட்டிங் நடத்துவது சகஜமாகி வருகிறது. அந்த வகையில், பள்ளியின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பதாகையில், “இது 1987 மற்றும் 1991-க்கு இடையில் இந்தப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் ரீயூனியன்” என்று எழுதப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மீட்டிங்கின்போது அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், இதில் பங்கேற்ற அனைவரும் உற்சாகமாக அசைவ விருந்து சாப்பிட்டதை வெளிப்படுத்திய வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், இந்த வீடியோவிற்கு பல யூஸர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளியை நிர்வகிக்கும் சூரத் மாநகராட்சியின் (SMC) கீழ் உள்ள தொடக்கக் கல்விக் குழு (PEC), விசாரணைக்கு உத்தரவிட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பள்ளி முதல்வர் பிரபாகர் எலிகாடினை இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பேசிய PEC தலைவர் ராஜேந்திர கபாடியா, ”இந்த சம்பவம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது, ஏனென்றால் பள்ளி வளாகத்தில் இந்த நிகழ்வுக்கு அதிகாரிகளிடமிருந்து எந்த அனுமதியும் பெறவில்லை மற்றும் இந்த கூட்டத்தின்போது அதில் பங்கேற்ற மக்களுக்கு அசைவ உணவு பரிமாறப்படுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக பள்ளி முதல்வரை நாங்கள் இடைநீக்கம் செய்துள்ளோம். அவர் மீது துறைரீதியான விசாரணையும் நடத்தப்படும்” என்றார்.
அதேநேரம் இந்த சம்பவம் குறித்துப் பேசி இருக்கும் இடைநீக்கம் செய்யப்பட்ட எலிகாடின், ”அசைவ உணவுகள் வெளியில் இருந்து பள்ளிக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவை பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டபோது, தான் அங்கு இல்லை” என்றும் கூறி உள்ளார். மேலும் “இது முன்னாள் மாணவர்களின் மறு இணைவு கூட்டம், இதில் பங்கேற்ற பலர் வெளிநாட்டிலிருந்து தங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்திருந்தனர்.
உண்மையில் ஒரு பண்ணை வீட்டில்தான் இந்த ரீயூனியனை ஏற்பாடு செய்ய நாங்கள் திட்டமிட்டிருந்தோம், ஆனால், அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே ஞாயிற்றுக்கிழமை பள்ளியின் பின்புறத்தில் அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. பள்ளியில் வைத்து எந்த அசைவ உணவுகளும் சமைக்கப்படவில்லை, அவர்கள் வெளியில் இருந்து அசைவ உணவுகளை ஏற்பாடு செய்துள்ளனர், உண்மையிலேயே அசைவ விருந்து நடந்த நேரத்தில் நான் அங்கு இல்லை” என்றும் எலிகாடின் கூறினார்.
October 15, 2025 2:47 PM IST


