Last Updated:
உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சூர்யகாந்தை நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைக்கும்படி மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் கொடுத்தது.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில், உச்சநீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக இருக்கும் சூர்யகாந்தின் பெயரை 53வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார்.
அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை நியமித்துள்ளார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார் நீதிபதி சூர்யகாந்த்.
ஹரியானா மாநிலம், ஹிசார் நகரில் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்த நீதிபதி சூர்யகாந்த், 2004 ஜனவரியில் பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு அக்டோபரில் இமாச்சல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
October 30, 2025 7:01 PM IST


