Last Updated:
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் எனும் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் கொடுத்துள்ளார்.
பிகார் மாநிலத்திற்கு வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
பிகார் தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவிவருகிறது.
ஓவைசி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் கட்சிகள் களத்தில் இருந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவிவருகிறது. இதில், மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் இன்னும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பதில் கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “முதலமைச்சர் வேட்பாளரை நான் எப்படி தேர்வு செய்ய முடியும்? கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து அதன் பிறகே அறிவிக்க முடியும். ஆனால், எங்கள் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில் தான் தேர்தலை சந்திக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்தப் பதில், பிகாரின் நீண்டகால முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படமாட்டாரா எனும் கேள்வியும் எழுந்து வந்தது. இந்நிலையில், நியூஸ்18 குழும தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடனான சப்ஸே படா தங்கல் (Sabse Bada Dangal) சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் இது குறித்து பதில் கொடுத்துள்ளார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அந்த நேர்காணலில் இது குறித்து அமைச்சர் அமித்ஷா பேசியதாவது; “பிகார் முதலமைச்சருக்கான வெற்றிடமும் இங்கு இல்லை, அதில் எந்தக் குழப்பமும் இல்லை. நிதிஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தலை எதிர்கொள்கிறோம் என நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
லாலுவுக்கு அவரது மகன் முதலமைச்சராக வேண்டும். சோனியாவுக்கு அவரது மகன் பிரதமராக வேண்டும். ஆனால், பிகாரிலோ அல்லது டெல்லியிலோ இரண்டு இடத்திலுமே அதற்கான வெற்றிடம் இல்லை என்பதை நான் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
October 29, 2025 10:29 PM IST


